செய்திகள்

ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள் - இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவு

Published On 2018-05-31 09:14 GMT   |   Update On 2018-05-31 09:14 GMT
4 மக்களவை தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தங்கள் வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. #ByPoll
புதுடெல்லி:

உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு ஆதரவு அளித்தன.

கைரான தொகுதியில் வென்ற தபசும் ஹசன்

இந்நிலையில், கைரானா தொகுதியில் தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக உறுப்பினர் மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பந்தாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி முகத்தில் உள்ளார்.

இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.

தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.

மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகிதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. #bypoll
Tags:    

Similar News