நாயகன் கார்த்தியின் தாத்தா ராஜ்கிரண், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் போதே அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி ராஜ்கிரணுக்கு வருகிறது. அதிர்ச்சியுடன் அந்த இடத்திலிருந்து வெளியே வரும்போது, அவருக்கு பேரனாக கார்த்தி பிறக்கிறார்.
பேரன் பிறந்ததால், "இவன்தான் அடுத்த எம்.ஜி.ஆர்" என்ற நம்பிக்கையுடன், கார்த்தி நேர்மையான மனிதனாக வளர வேண்டும் என ராஜ்கிரண் நினைக்கிறார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் மாதிரியான நல்ல பழக்கங்களுடன் கார்த்தி வளர்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் நம்பியார் இன்ஸ்பிரேஷனில், தவறான வேலைகளில் ஈடுபட்டு போலீசாக மாறுகிறார்.
இதற்கிடையில், "மஞ்சள்முகம்" என்ற ஹாக்கர் கும்பல் அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது. அவர்களை பிடித்தால் நல்ல பணம் கிடைக்கும் என்று நினைத்து, கார்த்தி அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில், கார்த்தியின் உண்மை முகம் ராஜ்கிரணுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்தி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக நெகட்டிவ் ஷேட்ஸ் உள்ள கதாபாத்திரங்களில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.
நம்பியார் இன்ஸ்பிரேஷனில் அவர் செய்யும் செயல்கள் கலாட்டாவாக இருக்க, பின்னர் எம்.ஜி.ஆர் போன்று மாறும் தருணங்களில் அவரது மேனரிசங்கள் கவனம் ஈர்த்து இருக்கிறார்.
படத்தின் முதல் பாதி, கார்த்தி தனது தாத்தாவுக்கு தெரியாமல் பல கோல்மால் வேலைகள் செய்து பணம் சம்பாதிப்பதை மையமாக கொண்டு நகர்கிறது. அந்த உண்மை தெரிந்த பிறகு ராஜ்கிரண் இறப்பதும், அதன் பின்னர் "எம்.ஜி.ஆர் மீண்டும் வருகிறார்" என்ற கான்செப்ட் படத்திற்கு முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.
கார்த்தியை தவிர, படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடங்களை நன்றாக செய்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாதது வருத்தம். அதுபோல், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஆகியோருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை.
இயக்கம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் வழக்கமாக இருக்கும் ஒன்-லைனர் காமெடி இந்த படத்தில் குறைவு. அந்த காமெடியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. குறிப்பாக இரவு நேரங்களில் எம்.ஜி.ஆர் வந்து கார்த்தியின் தவறுகளை தட்டி கேட்கும் காட்சிகள் மட்டும் ஆறுதல்.
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போல திரைக்கதை அமைந்து இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளர்கள் முன்கூட்டியே உணர முடிவது பலவீனம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு
டெக்னிக்கல் அம்சங்களைப் பொறுத்தவரை, ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.
குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை 60-களின் இசையை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் வழங்கியுள்ளது. எம்.ஜி.ஆர் பாடல்களின் ரீமிக்ஸ் அவரின் பங்கிற்கு சிறப்பாக அமைந்துள்ளது.
ரேட்டிங்-2/5