செய்திகள்

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Published On 2018-05-17 16:09 GMT   |   Update On 2018-05-17 16:09 GMT
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #BoatCapsize #GodavariRiver
ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் ஒரு திருமண வீட்டார் உள்பட 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பலத்த மழையுடன் காற்று வீசியதால் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த சிலர் நீந்தி கரை திரும்பினர். 15-க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல் கட்டமாக இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்றும், 10 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேய மிஸ்ரா கூறுகையில், இன்று நடந்த தேடுதல் வேட்டையில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆற்றில் படகு கவிழ்ந்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் 4 குழந்தைகள், 11 பெண்களும் அடங்குவர். மேலும் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது என்றார். #BoatCapsize #GodavariRiver
Tags:    

Similar News