செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

Published On 2018-05-15 20:24 GMT   |   Update On 2018-05-15 20:24 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. #BanSterlite #TalkAboutSterlite
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும், மக்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் ஆலை இயங்க அனுமதி அளித்துள்ளது.

எனவே இந்த வழக்கை முழுமையாக ஆராயாமல் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஆலையை நிரந்தரமாக மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.  #BanSterlite #TalkAboutSterlite
Tags:    

Similar News