வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 35 மாணவர்கள் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வாலிபர்களின் வீடியோ வைரல்
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- குழந்தைகளை மீட்க உதவிய வாலிபர்களுக்கு மல்லேயன் கிராம பஞ்சாயத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் மற்றவர்களிடம் அதிகம் நட்பு பாராமல் இருக்கும் படியான நிலை தான் உள்ளது. மேலும் மற்றவர்களுக்கும் உதவுவதும் முந்தைய காலங்கள் போல் அல்லாமல் அரிய நிகழ்வாகவே நடைபெறுகிறது. மற்றவர்களுக்கு உதவினால் தங்களுக்கு எதாவது பிரச்சனை ஏற்படுமோ என்கிற அச்சமும் பலரிடமும் நிலவுகிறது.
இருப்பினும் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மற்றவர்களுக்கு உதவ ஓடோடி வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மனிநேயமிக்க செயலில் வாலிபர்கள் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகாவில் மல்லேயன் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 35 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டனர்.
ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில், சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் ஆகிய இருவரும் பாலங்கள் போல் குனிந்து அவர்களுக்கு பாதை அமைத்து கொடுத்தனர். இதனால் 35 மாணவர்கள் அவர்கள் மீது ஏறி மற்றொரு முனைக்கு வந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து குழந்தைகளை மீட்க உதவிய வாலிபர்களுக்கு மல்லேயன் கிராம பஞ்சாயத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.