ஒடிசாவில் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல்
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.
- சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கோரிக்கை
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது சிறுமி தோழி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றபோது இளைஞர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " பலங்கா பகுதியைச் சேர்ந்த சிறுமியின் மரணச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவக் குழுவின் 24 மணி நேர முயற்சிக்கு பின்பும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், சிறுமியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் கடந்த மாதம் கல்லூரியில் ஒரு இளம் பெண் (பேராசிரியரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டு) தனக்கு நீதி கிடைக்காததால் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .