பள்ளிக்கு தாமதமாக வந்ததற்கு தண்டனையாக புத்தகப் பையுடன் 100 Sit Ups எடுத்த 13 வயது சிறுமி பரிதாப பலி
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.