இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாட்சியாக இருந்த 12 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

Published On 2025-07-08 00:59 IST   |   Update On 2025-07-08 00:59:00 IST
  • இந்த வழக்கில் அவர் வாக்குமூலம் அளிக்கவிருந்தபோது இந்தக் கொலை நடந்துள்ளது.
  • போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பீம் ஆர்மி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் (Ballia) 12 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வீட்டிற்குள் தூக்கிலிடப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமி, உறவினரான மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தார். இந்த வழக்கில் அவர் வாக்குமூலம் அளிக்கவிருந்தபோது இந்தக் கொலை நடந்துள்ளது.

முதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

பல்லியா, துட்டுவரி கிராமத்தில் சனிக்கிழமை மாலையில் குடும்பத்தினர் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது சிறுமி கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சிறுமியின் உறவினரான ஒரு பெண், பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமி ஒரு சாட்சியாக இருந்தார். நான்கு அண்டை வீட்டார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் கொலைக்கு தலைமை தாங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

முதல் வழக்கில் குழந்தை வாக்குமூலம் அளிப்பதைத் தடுக்கவே அந்தக் குழந்தை கொல்லப்பட்டதாகவும், அதைத் தற்கொலை போலக் காட்டுவதற்காகவே தூக்கிலிடப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பீம் ஆர்மி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார் என்ற உறுதிமொழியுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முதல் வழக்கு குற்றவாளி உட்பட சிறுமியின் அண்டை வீட்டாரில் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருவதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News