108 ஆம்புலன்சை கடத்திய திருடன்: விரட்டி பிடித்த போலீசார்
- ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சரூர் நகரில் இருந்து நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹயத் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன் மற்றும் டிரைவர் நோயாளியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மெஹபூபா பாத் மாவட்டம், லட்சுமி நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் காலபைரவா என்கிற வெங்கடேஸ்வரலு (55). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ்சில் யாரும் இல்லாததால் அதனை கடத்திக் கொண்டு சென்றார்.
நோயாளியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு வெளியே வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸ் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்புலன்சில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் சோதனை செய்தபோது ஆம்புலன்ஸ் ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிட்யாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஜெனாரெட்டி மற்றும் போலீசார் பாமன குண்டா ரெயில்வே மேம்பாலத்தில் ஆம்புலன்ஸை நிறுத்தும்படி கூறினார்.
ஆனால் வெங்கடேஸ்வரலு சப் இன்ஸ்பெக்டர் ஜனா ரெட்டி மீது ஆம்புலன்ஸ் மோதி விட்டு சென்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் உஷார் அடைந்த போலீசார் ஆம்புலன்ஸை தங்களது வாகனங்களில் துரத்திச் சென்றனர். கொல்லப்பட் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ்சை வழிமறித்தனர். அப்போது வெங்கடேஸ்வரலு ஆம்புலன்ஸை பின்னோக்கி எடுத்து சென்று வேறு திசையில் மீண்டும் ஐதராபாத் சாலையில் ஓட்டி சென்றார்.
இதனால் விரக்தி அடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரும் சாலையில் லாரிகளை குறுக்கே நிறுத்தினர். லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்ட வெங்கடேஸ்வரலு ஆம்புலன்சை மீண்டும் வேறு சாலை வழியாக திருப்பி வேகமாக சென்றார்.
அப்போது ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்சில் இருந்து தப்பி ஓடிய வெங்கடேஸ்வரலுவை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
பின்னர் வெங்கடேஸ்வரலு சிட்யாலா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடிச் செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் 120 கிலோமீட்டர் விரட்டி சென்று மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.