காரமடையில் வங்கி ஏ.டி.எம்.மிற்கு கொண்டு சென்ற ரூ.19¾ லட்சம் பறிமுதல்
சூலூர்:
கோவையை அடுத்த காரமடையில் பறக்கும் படை குழு அலுவலரும், எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெசிமாலினி, சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவன வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வேனுக்குள் இருந்த பெட்டிக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.19 லட்சத்து 77 ஆயிரத்து 137-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவையை அடுத்த கலங்கல் பகுதியில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த அதில் கட்டுக்கட்டாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. காரில் வந்தவர் சூலூரை அடுத்த செலக்கரைச்சல் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்றும், ஒரு தனியார் வங்கிக்கு பணத்தை கட்ட கொண்டு செல்வதாகவும் கூறினார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி- கோவை சாலையில் கோவில்பாளையத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள மாநிலம் சித்தூரில் இருந்து வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் காரில் ரூ.68 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காரில் வந்த பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த முகமது பராக் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது திருப்பூரில் துணி கொள்முதல் செய்வதற்காக பணத்தை எடுத்து செல்வதாக தெரிவித்தார். ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பெரியகளந்தையில் பறக்கும் படை அதிகாரி வினேஷ் தலைமையில், நடந்த வாகன சோதனை நடந்தது. இதில் கிணத்துக்கடவை சேர்ந்த டாக்டர் சுரேந்தினி உரிய ஆவணம் இன்றி வைத்து இருந்த ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் 28 லட்சத்து 65 ஆயிரத்து 637 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #Loksabhaelections2019