செய்திகள்

எனக்கும் இளங்கோவனுக்கும் மட்டுமே போட்டி- தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2019-04-08 07:35 GMT   |   Update On 2019-04-08 07:35 GMT
தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
தேனி:

தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
Tags:    

Similar News