செய்திகள்

ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்: மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ்- பியூஸ் கோயல்

Published On 2019-03-27 12:34 GMT   |   Update On 2019-03-27 12:34 GMT
ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளார். #PiyushGoyal #congress #bjp

கோவை:

மத்திய மந்திரி பியூஸ் கோயல் கோவையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்து உள்ளார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பியூஸ் கோயல் கூறியதாவது:-

இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த உதவிகளை காங்கிரஸ் பறித்து விட்டு ரூ.72 ஆயிரம் வழங்குமா? என்பதை தெளிவு படுத்த வேண்டும். மக்கள் ஒருபோதும் மானியம் வழங்குவதை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்கப் பார்க்கிறது. இது இந்திய மக்களிடம் எடுபடாது.


இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள் எந்த அளவுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். எளிமையான தலைவனால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிலைமையை உணர முடியும். பிரதமர் மோடி மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்ததால், தாய்மார்களின் கண்ணியத்தை காக்க கழிவறை கட்டும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார். எல்லா வீடுகளுக்கும் மின்சாரம், ஆரோக்கியமான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பலன் அடைந்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமானால் தமிழக வளர்ச்சி இரு மடங்காக உயரும் என்பதில் ஐயமில்லை.

தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படக் கூடிய வலிமையான திறமையான தலைவர் தேவை. எதிரி நாட்டின் எல்லையை கடந்து தாக்கி பயங்கரவாதத்திற்கே பதிலடி கொடுத்த ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி மட்டும் தான். வேகமாக, வளமான, பொருளாதார வளம் பெற்ற நாடாக இந்த நாடு வளர்ந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து பிரதமர் மோடியின் கரத்தை நாம் வலிமையாக்க வேண்டும்.

அதற்கான மெகா கூட்டணியை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவுவதோடு, நாம் நாற்பதும் நாமதே என வெற்றி வாகை சூட வேண்டும். இந்தியா சூப்பர் பவராக மாற மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #PiyushGoyal #congress #bjp 

Tags:    

Similar News