செய்திகள்

சேலம் 8 வழிச்சாலையை அனுமதிக்க மாட்டோம்- பாமக தேர்தல் வாக்குறுதி

Published On 2019-03-15 08:22 GMT   |   Update On 2019-03-15 10:02 GMT
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று பா.ம.க.வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #PMK #PMKManifesto
சென்னை:

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை சென்னையில் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.

* உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

* அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பாடுபடும்.

* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

*மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாடுபடும்.

* மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு 44 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

* மத்தியில் புதிய அரசு பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் லோக்பால் அமைப்பு அமைக்கப்படும்.

* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.

* இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும்.

* தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்புவது கட்டாயமாக்கப்படும்.

* தனி நபர்களின் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி வசூலிக்கப்படும்.

* ஜி.எஸ்.டி. வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.

* மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.

* பட்டாசு ஆலைகள் சிக்கலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து நிலை தொழிற் சாலைகளிலும் 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய - மாநில அரசுகளின் மூலம் உறுதி செய்யப்படும்.

* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்த 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.



* சென்னை -சேலம் இடையிலான எட்டு வழிச் சாலைக்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பா.ம.க. அனுமதிக்காது.

* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்கப்படும்.

*உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரசார சபாவுக்கு இணையாக தமிழ்பிரசார சபா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

*ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கவும், கச்சத்தீவை மீட்கப் பாடுபடுவோம்.

*இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு, மு.ஜெயராமன், ராதாகிருஷ்ணன், அடையார் வடிவேல, இரா.சகாதேவன், ஈகை தயாளன், கன்னியப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #LSPolls #PMK #PMKManifesto

Tags:    

Similar News