செய்திகள்

எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கவர்னருக்கு ஆர்எஸ் பாரதி கடிதம்

Published On 2019-03-09 07:15 GMT   |   Update On 2019-03-09 07:51 GMT
சட்ட விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக கவர்னருக்கு திமுக செயலாளர் ஆர்எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார். #DMK #RSBharathi #EPS #OPS
சென்னை:

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கவர்னருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதிமுறை.

தலைமைச் செயலாளரின் கீழ் அனைத்து துறைகளும் தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் முதல்- அமைச்சரான எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் அரசியல் சட்டத்தின்படி, தான் பதவியேற்கும்போது எடுத்த பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, தான் சார்ந்த அ.தி.மு.க. கட்சிப் பணிகளுக்காக, தலைமைச் செயலகத்தை, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி, நேற்றைய தினம் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் துணை போயிருக்கிறார்.



அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம் சாட்டியதால், அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கட்சியில் இணைக்கும் செயலை, அரசின் தலைமைச் செயலகத்தில் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

நேற்று நடந்த இந்நிகழ்வால், தமிழக அரசின் முதல்-அமைச்சராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்-அமைச்சராக இருக்கின்ற ஓ.பன்னீர் செல்வமும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

எனவே, தமிழக ஆளுநர் இப்பிரச்சனையில் தலையிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #RSBharathi #EPS #OPS
Tags:    

Similar News