போலீசாரின் வாகன சோதனையில் கஞ்சா மறைத்து வைத்திருந்த வாலிபர் கைது
- சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அகரம் கூட்டுச்சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் அவ்வழியே சென்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சின்னம்பேடு கிராமம், அய்யனார் மேடு பகுதியைச் சேர்ந்த தளபதி(வயது30) என்று கூறினார்.
மேலும், அவரது பையில் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர் சுமார் ஏழு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.