சேலம் தாதகாப்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு வந்து வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார்.
- சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை அங்கு காணவில்லை.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் ( வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு வந்து வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை அங்கு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கம், அருகில் உள்ள இடங்களில் தேடியும் எங்கும் வண்டி கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் நோட்டமிட்டு வண்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில் தாதகாப்பட்டி, திருச்சி மெயின் ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். போலீசார் தீவிர விசாரணையில், அவர் தாதகாப்பட்டி கேட், அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (19) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.