தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானை
- வெயில் காலம் என்பதால் காட்டுப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் போன்றவை காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளது.
- காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து வலம் வந்த காட்சி தற்போது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அடர்ந்த காடுகளையும், மலைப்பகுதிகளையும் கொண்டது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
மாநில கர்நாடக வனப்பகுதியும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியும் ஒட்டியிருப்பதால் கர்நாடகமாநிலத்தில் இருந்து காட்டு யானைகள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி, தளி, அஞ்செட்டி வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.
தற்போது வெயில் காலம் என்பதால் காட்டுப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் போன்றவை காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளது. காடுகளில் செடிகள், கொடிகள், மரங்கள் காய்ந்து விட்டதாலும், குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் தற்போது காட்டு யானைகள். நகருக்குள் வரும் நிலை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தளி அருகே உள்ள கும்மலாபுரம் கிராமத்தில் காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து வலம் வந்த காட்சி தற்போது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்டு விலங்குகள் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு புகாத வண்ணம் வனப்பகுதிகளில் போதிய அளவு, உணவு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து கிராமங்கள் மற்றும் நகர் பகுதிக்கு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நுழைவதை தடுக்க, தேவர்பெட்டா முதல் முத்தியாலு, மடுவு ஜீரோ பாய்ண்ட் வரை மின்வேலி அமைத்து கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.