உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு

Published On 2022-11-27 09:17 GMT   |   Update On 2022-11-27 09:17 GMT
  • 6 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது
  • தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர்

கோவை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3,552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

கோவை மாவட்டத்திலும் கோவை பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக்கல்லூரி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்பட 6 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

தேர்வு மையங்களுக்கு அதிகாலை முதலே தேர்வர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மையத்திற்கு முன்பாக காத்திருந்தனர். காலை 8.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மையத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பாக தேர்வர்களை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனா, ஹால்டிக்கெட் உள்ளிட்டவற்றை மட்டுமே எடுத்து செல்ல அனுமதித்தனர்.

தேர்வு மையத்திற்கு செல்ேபான் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் தேர்வர்களின் ஹால்டிக்கெட்டையும் சரிபார்த்து உள்ளே அனுப்பினர்.சட்டையின் கையை மடித்து விட்டிருந்தவர்கள் கீழே இறக்கி விட்டு ெசல்ல அறிவுறுத்தினர்.

தேர்வர்கள் காலை 9.50 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

தேர்வு தொடங்கியதும், தேர்வர்களின் ஹால்டிக்கெட் மற்றும் அதில் உள்ள புகைப்படங்கள் விவரங்கள் சரிதானா என்பதை அதிகாரிகள் சரிபார்த்தனர். தேர்வானது 12.40 மணிக்கு முடிவடைந்தது. தேர்வின் இடையே அதிகாரிகளும் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் நடந்த இந்த தேர்வில் திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 309 பேர் எழுதினர்.

Tags:    

Similar News