மேயர் சரவணனிடம் குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு கொடுத்த காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ.
தியாகராஜ நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும்-மேயரிடம் குடியிருப்போர் நல சங்கத்தினர் மனு
- நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- மல்லிகா காலனியில் இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தியாகராஜ நகர் மல்லிகா காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் குமாரவேல் தலைமையில் செயலாளர் பழனிச்செல்வி, பொருளாளர் பெரியநாயகம் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான மல்லிகா காலனி உருவாகி 40 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எந்த அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்து தரப்படவில்லை. புறவழிச் சாலைக்கு அருகே இருப்பதால் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சாலை வசதி கேட்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்னரே பணிகள் நடைபெறும் என்று கூறிவிட்டனர்.
எங்களது தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எங்களது பகுதியில் 19 மின்கம்பங்கள் உள்ளன. இதில் எந்த கம்பத்திலும் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
எனவே உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்து எங்கள் பகுதி மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்