உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய காட்டு விலங்குகள் - நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-11-19 09:07 GMT   |   Update On 2022-11-19 09:07 GMT
  • 750 ஏக்கர் பரப்பளவில் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது
  • அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்டது சுந்தரேஸ்வரன் கிராமம் ஆகும். இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

பயிர்கள் சேதம்

மேலும் பருத்தி, உளுந்து, கம்பு ஆகிய பயிர்கள் 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குருமலை வனத்துறை பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மான்களும், பன்றிகளும் இப்பகுதியில் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து விடுவதாகவும், அவை பயிர்களை சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

தினமும் 5 முதல் 10 ஏக்கர் வரை சேதம் செய்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதி விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டங்களுக்கு சென்று இரவு பகலாக விளக்குகளை வைத்துக்கொண்டு காவலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் விவசாயிகள் அயர்ந்து தூங்கிவிடும்போது ஏராளமான காட்டு விலங்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வேதனை

இன்று காலை 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை அவை சேதப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் தங்க நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.ஒரு ஏக்கருக்கு 30 குவிண்டால் மக்காச்சோளம் கிடைக்கும். அதற்கு விலையாக ரூ.60 ஆயிரம் பெறுவோம். ஆனால்

இந்த ஆண்டு அனைத்துமே பாழாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் இங்கு வந்து சேதங்களை கணக்கீடு செய்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News