உள்ளூர் செய்திகள்

கோவை அருகே குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்

Published On 2023-04-21 14:33 IST   |   Update On 2023-04-21 14:33:00 IST
  • யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது.
  • கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

கவுண்டம்பாளையம்,

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் தான் உள்ளன.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கிரா மத்திற்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.இந்த யானைகள், கிராமத்தில் உள்ள சாலைகளில் ெவகுநேரமாக சுற்றி திரிந்தன. இதற்கிடையே ஊருக்குள் யானைகள் புகுந்து விட்டதை அறிந்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல அதிகாலை நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.

வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News