உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் காட்டெருமை இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதா? வனத்துறை விசாரணை

Published On 2023-10-20 14:10 IST   |   Update On 2023-10-20 14:10:00 IST
  • தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காட்டெருமை பலி.
  • வனத்துறையினர் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டம். இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலாடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கத் தக்க ஆண் காட்டெருமை ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனவர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் கொலக்கம்பை சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர்.

அப்போது அதன் தலையில் காயங்கள் இருந் தன. காட்டெருமை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் காட்டெருமையை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது காட்டெருமை யின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் பிளாஸ்டிக்கிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. காட்டெருமையின் தலைமையில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததன் மூலம் யாரோ மர்மநபர்கள் காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரிய வந்தது.

இறந்த காட்டெருமையின் உடலை மாவட்ட வன அலுவலர் கெளதம் மற்றும் உதவி வன பாதுகாவலர் தேவராஜ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து வனத்துறையினர் காட்டெருமையின் உடல் உறுப்புகளை தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த காட்டெருமையின் உடலை அங்கேயே புதைத்தனர்.

தொடர்ந்து காட்டெருமையை சுட்டுக்கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர். மேலும் காட்டெருமையை யாராவது இறைச்சிக்காக வேட்டையாடினார்களா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. அது தொடர்பாகவும் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனிப்படையினர் காட்டெருமை இறந்து கிடந்த பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள், காட்டேரி அணைக்கு மேல் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் காட்டெருமையை துப்பாக்கியால் சுடும் நபர் பதிவாகி இருக்கிறாரா என்பது ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்த காட்டெருமையை உடல் கூராய்வு செய்த போது தலையில் இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன. காட்டெருமையை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News