உள்ளூர் செய்திகள்

கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் நடக்கும் வகுப்புகள்

Published On 2023-07-05 07:48 GMT   |   Update On 2023-07-05 07:48 GMT
  • திருச்சுழி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன.
  • நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பகவான் ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

450 பேர் படிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இட நெருக்கடி யால் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பின்தங்கிய பகுதியான திருச்சுழியில் கல்வி தொடர வந்துள்ள மாணவர்கள் மத்தியில் இட நெருக்கடியால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பள்ளியில் 600 முதல் 700 பேர் வரை படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போதைய கல்வியாண்டில் மேலும் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது 60 முதல் 70 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான மாணவர்கள் இருக்கையிலும், இடம் பற்றாக்குறை காரணமாக தரையிலும் அமர்ந்து கல்வி கற்றுக்கொள்வதால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது.

மேலும் போதிய இட வசதி இல்லாமல் இட நெருக்கடியால் பள்ளியின் வெளியே உள்ள சாலையின் நடுவே காலை பிரார்த்தனையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு மைதானம், ஆய்வக வசதியும் இல்லாமல் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் இங்கு அரசு பள்ளியில் போதிய இடம் வசதியில்லாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.

ஆகவே திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News