கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் சையது இப்ராகிம். இவரது மகள் ரமலான் ராபியா(21). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரமலான் ராபியாவை அவரது சகோதரர் தினமும் பஸ் நிறுத்ததிற்கு அழைத்து செல்வார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
விசாரித்த போது கல்லூரிக்கு வரவில்லை என தெரியவந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து சையது இப்ராகிம் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் எம்.ராமசந்திராபுரம் தங்கக்கொடி(27). 6 மாதங்கள் அம்மாபட்டி அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பிறகு வேறு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் வேலை சம்பந்தமாக மதுரை சென்று வருவதாக கூறி சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது தாய் தங்கேஸ்வரி அளித்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவரது சகோதரி மகன் ஹரீஷ்(15). இவரது வீட்டில் தங்கி படித்து வந்தார். படிப்பு சரியாக வரவில்லை. இதனால் ஹரீசை சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு கருப்பசாமி அனுப்பி வைத்தார். ஆனால் அங்கும் அவர் சரியாக படிக்கா ததால் அவரை மீண்டும் விருதுநகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.