பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உறுதி- தமிழக அரசு முடிவு
- தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன.
- பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது.
சென்னை:
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு உள்பட ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டன.
அதேபோல 2024-ம் ஆண்டில் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டன. அதோடு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டன. ஆனால் இந்த ரொக்கத்தொகை மத்திய -மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை.
அதே சமயம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளன. அதோடு ரொக்கப்பணமும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அது ரூபாய் ஆயிரமா?, ரூ.2 ஆயிரமா?, ரூ.3 ஆயிரமா அல்லது ஏன் ரூ.5 ஆயிரமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தால்தான் தெரியும். இருந்தாலும் வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்குவது மட்டும் உறுதியாகி உள்ளது.
ஏனென்றால் அதற்கான முக்கிய காரணம் சட்டசபை தேர்தல் தான். தமிழகத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகிவிடும். எனவே தேர்தலை தமிழகம் சந்திக்கவுள்ள நிலையில் ரொக்க பணம் அரசு வழங்கும் என்று மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏனென்றால் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அ.தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி-திராட்சை, ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கினார்.
எனவே சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளதால் கடந்த முறை அ.தி.மு.க. அரசு வழங்கியதை விட கூடுதலாக தி.மு.க. அரசு வழங்கும் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியும், பொங்கல் ரொக்க பணமாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் உள்ள அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வழங்கினால் தமிழக அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 817 கோடி தேவைப்படும். அதுவே ரூ.5 ஆயிரம் என்றால் ரூ.11 ஆயிரத்து 361 கோடி தேவை ஆகும்.
தமிழக அரசை பொறுத்தவரை ஏற்கனவே மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, முதியோர்- விதவை- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கி வருகிறது.
அதோடு 100 யூனிட் இலவச மின்சார மானியம், பெண்கள் விடியல் பயணம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி சுமை இருந்தாலும், பொங்கலுக்கு ரொக்க தொகை வழங்குவது உறுதி என்று கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்திலேயே அறிவிக்க உள்ளார்.
அதற்கிடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. அதில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு டோக்கன் கொடுப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டு டோக்கன் கொடுக்கும் பணி 7-ந்தேதியும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி 11-ந்தேதியும் தொடங்கியது. அதே போல், இந்த பணி தொடங்குமா? அல்லது முன்னதாக தொடங்குமா? என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும்.