வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு- மேலும் 2 பேர் கைது
- 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு 4 மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்
- நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 46).
இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி அதிகாலை சுமார் 3 மணி அளவில் ரவிசந்திரன் வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு 4 மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதில் வீடு மட்டும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த ராகுல் (22), சச்சின் (24), ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழ கல்கண்டார் கோட்டை அண்ணா நகரை சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் லோகேஷை திருவெறும்பூர் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் மற்ற 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று ராக்கி ( எ) ராகேஷ் , சச்சின் ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.