உள்ளூர் செய்திகள்

புலியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-09-14 10:12 GMT   |   Update On 2022-09-14 10:12 GMT
  • புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது.
  • புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது.

குன்னூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது.

இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து வனப்பகுதியில் சவாரி செய்யும் போது காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகளை மட்டுமே காண முடியும்.

புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் புலியை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில் வாகனத்தில் சவாரி செல்கின்றனர். பெரும்பாலான நேரத்தில் புலியை காணாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் சவாரி சென்றனர். அப்போது சர்க்கிள் ரோடு பகுதியில் சென்ற போது புதருக்குள் புலி ஒன்று படுத்து கிடந்தது. அதை கொசுக்கள் சில மொய்த்து கொண்டிருந்தது. இதனால் தலையை அசைத்தபடி புலி படுத்து கிடந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் புலியை பார்த்து ரசித்தனர். மேலும் சாலையின் கரையோரம் இருந்ததால் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

சிலர் ஆர்வ மிகுதியால் புலியை பார்த்தவாறு ஒருவருக்கொருவர் பேசினர். இதைக்கண்ட வன ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை சத்தம் போடக்கூடாது என அறிவுறுத்தினர். பின்னர் புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புலியை பார்த்த திருப்தியுடன் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளை கண்டால் சத்தம் போட்டு இடையூறு செய்யக்கூடாது என்றனர்.

Tags:    

Similar News