ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
- ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்.
- கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் அவரை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்ததாக வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார்.
சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார்.
பின்னர் அந்த அமைப்பின் பெயரை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். வருகிற சட்டசபை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கான முயற்சிகளை ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்டார்.
ஆனால் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் பொறுமையாக காத்திருந்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர தொடங்கினார்கள். ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் அவரை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்ததாக வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார்.
இதே போல் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்திலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு இல்லை. இதற்கிடையே தை மாதம் முடிவதற்குள் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார். சட்டசபை கூட்டம் இன்று நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். சட்டசபை வளாகத்தில் சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க.வில் ஐக்கியம் ஆகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்கிற நிலையில் அவர் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.