உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்த காட்சி.

மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்திப்பு

Published On 2022-09-20 07:49 GMT   |   Update On 2022-09-20 07:49 GMT
  • 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது.
  • விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது.

பல்லடம் :

மின் கட்டண உயர்வில் சலுகை கேட்டு சென்னையில் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்தனர்.

இதுகுறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விசைத்தறி ஜவுளி தொழில் காப்பாற்றி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த காடா ஜவுளிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால் விசைத்தறி தொழில் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் சலுகைகள் வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

எங்களது கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி நல்ல பதில் கூறுவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். தமிழக முதல்வர் விசைத்தறி தொழிலுக்கு சலுகை அளித்து ஜவுளித் தொழிலை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News