உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டுகோள்

Published On 2022-12-12 10:28 IST   |   Update On 2022-12-12 10:28:00 IST
  • நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையமானது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் முகமையினை பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை ஆதார் சேர்க்கை முகமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களின் முகவரி நிரந்தரமாக இருந்தால் ஆதார் தரவை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.

தற்போது பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மார்ச் மாதம் 5-ந் தேதியும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 12-ந் தேதியும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 19-ந் தேதியும் ஆதார் சேவை மையம் செயல்படும்.

ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 22-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 26-ந் தேதி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 29-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 9-ந் தேதியும், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதியும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதியும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியும் ஆதார் சேவை மையங்கள் செயல்படும்.

இதுபோல் எல்காட் மூலமாக நடக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தொட்டிப்பாளையம், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படுகிறது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்ததேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்களை புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.

தமிழக அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதார் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்யலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News