உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

வெறிநாய் கடித்தால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் அறிவுறுத்தல்

Published On 2022-09-30 11:28 GMT   |   Update On 2022-09-30 11:28 GMT
  • தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர்
  • நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

 திருப்பூர் :

பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட, சாலையில் சுற்றித்திரியும் நாய்களே பிறரை கடிப்பவையாக இருப்பது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தக்க நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ.இது குறித்து அவர் கூறியதாவது:-

நாய்களிடம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நாய் அருகில் குழந்தைகளை தனியே விளையாட விடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியம்.நாய் கடித்தால் மறைக்காமல், சொல்ல வேண்டுமென பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாய் கடித்தது ஆனால் ரத்தம் வரவில்லை. பற்கள் பதியவில்லை, லேசாக நகத்தில் பிராண்டியது என்றாலும், டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

நாய்க்கடிக்கு பொதுவாக முதல்நாள், 3-வது, 7-வது, 14 மற்றும் 28வது நாள் என 5 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நாய்கடித்தவர் ஒருமுறை தடுப்பூசி செலுத்துமிடத்தில் பதிவு செய்து விட்டால் மறுமுறை அங்கு தான் வர வேண்டும் என்பதில்லை. பதிவு செய்து பதிவுஅட்டை பெற்று எந்த மருத்துவமனையிலும் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் 5 தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய்க்கடித்து சரியான நேரத்துக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், அலட்சியமாக இருந்து விட்டால் 6மாதம் கழித்து கூட தொந்தரவு வர வாய்ப்புள்ளது. எந்த நாயிடம் ரேபிஸ் கிருமி இருப்பது என்பது நமக்கு தெரியாது.

நாய்க்கடி வேறு, வெறிநாய்க்கடி வேறு. கடித்த நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தடுப்பூசி போடவில்லையென்றால், ரேபிஸ் வைரஸ் நரம்புகளில் குடியேறும். வீரியத்தை காட்டும். தண்ணீர் குடிக்க, சாப்பிட பிரச்னை ஏற்படும். நரம்புகள் பாதிப்பதால் உணவு எடுக்க முடியாமல் இறப்பை தழுவ நேரிடலாம்.நாய் கடித்த இடத்தை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். ரத்த போக்கு குறைந்தவுடன், நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.இவ்வாறு டாக்டர் செண்பகஸ்ரீ கூறினார்.

Tags:    

Similar News