உள்ளூர் செய்திகள்

கோவிலுக்கு செல்லும் வழியில் தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.

அவினாசி கோவிலுக்கு செல்லும் வழியில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பக்தர்கள் அவதி

Published On 2023-08-24 06:57 GMT   |   Update On 2023-08-24 06:57 GMT
  • வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது.
  • தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

அவினாசி

அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இதில் சிறிய ரக மீன்கள் குளத்திற்குள் செத்து மிதக்கின்றன. இந்த தெப்பகுள தண்ணீர் துர்நாற்றத்துடன் கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஆறாய் ஓடுகிறது. இதனால் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீரை மிதித்து கொண்டுதான் கோவிலுக்குள் செல்ல வேண்டியுள்ளது.

இதை கோவில் நிர்வாகத்தினர் கண்டும் காணாமல் இருப்பது பக்தர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்:- கோவில் கும்பாபிஷேகத்திற்காக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து வண்ணம் தீட்ட உள்ளதால் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அதில் சிறிது தண்ணீர் கசிகிறது. கூடிய விரைவில் நீர் இறைக்கும் பணி முடிந்து விடும் மேலும் நீர் கசியாமல இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News