மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும்- இ.பி.எஸ். வாழ்த்து
- தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
- மலர்கின்ற இப்புத்தாண்டு நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னை:
ஆங்கில புத்தாண்டு நாளை (வியாழக்கிழமை) பிறப்பதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை, இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மலர்கின்ற இப்புத்தாண்டு, தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், இயேசு அழைக்கிறார் தலைவர் பால் தினகரன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.