கைதானவர்களை படத்தில் காணலாம்.
டெய்லர் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
- நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38,500 திருட்டுப்போனது.
- ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால் நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38,500 திருட்டுப்போனது.
இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிர்மலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நிர்மலாவின் கடைக்கு வந்து செல்லும் மரகதம் என்கிற சுபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர் விசாரணை நடத்திய போது நிர்மலாவின் கடைக்கு சுபா அடிக்கடி வந்து செல்வதால் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால் நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார். சம்பவத்தன்று சுபா நிர்மலா கடையில் இருந்த வீட்டின் சாவியை நைசாக எடுத்துச் சென்று கதவைத் திறந்து பீரோவில் இருந்த நகை பணத்தை திருடி கணவர் விக்னேஷ் மற்றும் விக்னேசின் தம்பி தீனதயாளன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு பின்னர் சாவியை கடையில் வைத்து சென்றது தெரியவந்தது. மேலும் திருடிய நகைகளை விக்னேசின் தாய் ஈஸ்வரி விற்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து வீரபாண்டி போலீசார் மரகதம் என்கிற சுபா (28), ஈஸ்வரி (44), விக்னேஷ் (30), தீனதயாளன் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 61/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.