உள்ளூர் செய்திகள்

பார்வைதிறன் குறையுடையோர் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் கற்றுக்கொடுக்கப்படும் திருக்குறள்

Published On 2023-11-06 10:07 GMT   |   Update On 2023-11-06 10:07 GMT
  • 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • மாணவர்கள் திருக்குறளை கற்றுக்கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.

திருக்குறளை பள்ளி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் புது முயற்சியாக தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரப்படுகிறது.

இதன் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி மற்றும் முழுவதும் என பார்வைத்திறன் குறையுடைய மாணவ- மாணவியர்கள் என 1 முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி எழுத்து கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி கல்வி பெற்று வருகின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் 10 முதல் 12- ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு சென்னை (பூந்தமல்லி), திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.

தஞ்சையில் மட்டுமே ஆண், பெண் ஆகிய இருபாலரும் படிக்கும் வசதி உள்ளது.

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்றுத் தரும் வகையில் புது முயற்சியாக ஒலிபெருக்கி வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை தானியங்கி கருவியின் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது.

மேலும் அந்த திருக்குறளை உற்று நோக்கும் வகையில் முன்னதாக ஒரு மணி நேரம் முடிவடைந்ததும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்பட்டு பின்னர் திருக்குறள் ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது.

இதன் மூலம் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் அந்த அலாரத்தை கவனித்தும், பின்னர் திருக்குறளை மனதில் உள்வாங்கி அவற்றை கற்றுக் கொள்கின்றனர்.

இதன் மூலம் மாணவ- மாணவிகள் திருக்குறளை கற்று கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளிலும் பங்கு பெறுகின்றனர்.

தாங்கள் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளனர்.

மேலும் இப்பள்ளியில் சிறப்பு அம்சமாக கணிணி பயன்பாடு பாடப்பிரிவு கணிணி வாய்ஸ் மூலம் கற்றுத் தரப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி கூறுகையில், பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் கடிகாரத்தை நேரில் பார்க்க முடியாததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் அலாரம் அடித்து பின்னர் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு அதன் பொருளும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்கள் திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார்.

மற்ற மாணவர்களை போல் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் திருக்குறளை கற்க புது முயற்சி எடுக்கும் பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News