உள்ளூர் செய்திகள்

மத்திய மந்திரி பிரலாத் ஜோஷி

தடையில்லா மின் உற்பத்திக்கு நடவடிக்கை- மத்திய மந்திரி பேட்டி

Published On 2022-06-05 01:56 IST   |   Update On 2022-06-05 02:27:00 IST
  • கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது
  • அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியில், சுரங்கப் பணிகளை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரலாத் ஜோஷி,நேற்று ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் உஜாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்இடி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக நாடு முழுவதும் மின்நுகர்வின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என்றார்.

எனினும் கோடைகால வெப்பம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது என்றும், இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

2040-ம் ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தி சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் என்றும், அதே வேளையில், இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 2040 ஆண்டிற்குள் அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித் திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் என்எல்சி நிறுவனம், அதன் உற்பத்தித்தி திறனில் 45%-க்கும் மேலாக, அனல் மின்சக்தி மற்றும் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 1-ஜிகாவாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News