உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது: இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான்-நாஞ்சில் சம்பத்

Published On 2025-02-20 11:12 IST   |   Update On 2025-02-20 11:12:00 IST
  • சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
  • பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது.

ஈரோடு:

ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'இது பெரியார் மண்' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.

பெரியாரை கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தால், எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.

பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்?. ஈனபையன் சீமான் பெரியார் பற்றி தவறாக பேசுகிறார். எங்கே சோறு கிடைக்கும் என்று பா.ஜ.க தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.

திராவிட இயக்கத்தை ஏன் பா.ஜ.க குறி வைக்கிறது என்றால், பெரியார் திராவிட இயக்கத்தினை முன் வைத்து வழிநடத்திச் செல்வதால் தான். சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? திராவிடம் என்றால் தாலாட்டு குழந்தை போன்று தெரிகிறதா?.

சீமான், ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.400 கோடியும், பா.ஜ.க.விடம் இருந்து ரூ.300 கோடியும் வாங்கினார். தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக சொன்னதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா?

பிரபாகரனை சீமான் சந்தித்தாராம்? சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை. உலகத்தில் நிகரற்ற வீரன் நேற்றும், இன்றும், நாளையும் பிரபாகரன் தான்.

சீமான் பா.ஜ.க.வின் கைக்கூலி, அடியாள் என 10 வருடமாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது. கட்சியின் இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். ஆனால் எப்போது அவர் ஏற்றுமதி செய்யப்படுவார் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

முருகனை வைத்து சீமான் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என அவரே சொல்லட்டும்.

கூவம் பாவத்தை போக்கினால் போக்கும், நத்தை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறும். ஆனால், பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.க.விற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது, கிடைக்க விடமாட்டோம்.

அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும், பயப்பட மாட்டோம். பெரியார் கொள்கை மீட்டெடுக்க சாவக்கூட தயார். 100 ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News