உள்ளூர் செய்திகள்

சபாநாயகர் நியாயமான, நல்ல தீர்ப்பு வழங்குவார்: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு முடியும் வரை ஓய மாட்டோம்- பெங்களூரு புகழேந்தி ஆவேச பேட்டி

Published On 2022-07-20 15:18 IST   |   Update On 2022-07-20 15:18:00 IST
  • எடப்பாடி பழனிசாமி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அப்படி பேசுவதற்கு அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறேன்.
  • இன்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஓசூர்,

அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான பெங்களூரு புகழேந்தி ஓசூரில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கூறிவிட்டார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அப்படி பேசுவதற்கு அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமியை வன்மையாக கண்டிக்கிறேன். இன்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக, ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது செல்லவே செல்லாது. இது வெறும் கண்துடைப்புதான். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வெற்றி கிடைக்கும். சட்டமும் அவருக்கு சாதகமாக அமையும்.

சபாநாயகரும் நியாயமான, நல்ல தீர்ப்பு வழங்குவார் என்று நம்புகிறோம்.அ.தி.மு.க.விற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் ஆணித்தரமாக நிற்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு முழுமையாக முடியும்வரை, நானும் என்னை சார்ந்தவர்களும் தூங்கமாட்டோம், ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News