உள்ளூர் செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்பு

Published On 2022-08-24 10:03 GMT   |   Update On 2022-08-24 10:06 GMT
  • காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் வழக்கம்போல் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
  • கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்த போது, படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மேடு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம்(40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய ஏழு மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் அனைவரும் மீன்பிடித்து விட்டு 21-ந்தேதி மாலைக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் மாலை 6 மணிவரை மீனவர்கள் கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடைசியாக மீனவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் மாயமான ஏழு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் காரைக்கால் மேடு சக மீனவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மாயமான மீனவர்கள் மற்றும் மீனவர்களின் படகுகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று (23 -8-22) காலை கோடியக்கரை அருகே மாயமான ஏழு மீனவர்களின் பைபர் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை, கடலில் தேடி சென்ற சக மீனவர்கள் பார்த்து, உடனடியாக ஏழு மீனவர்களையும் மீட்டு தங்கள் விசைப்படகுகளில் ஏற்றினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்த அவர்களுக்கு, முதல் கட்டமாக தண்ணீர் மற்றும் உணவு வழங்கினர். இவர்களுக்கு நாகை மீனவர்கள் சிலரும் உதவி செய்துள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் காரைக்காலுக்கு பத்திரமாக நேற்று இரவு திரும்பினர்.

Tags:    

Similar News