அவுட்டுக்காய் வெடித்து பெண் யானை பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை
- கேரள வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வனச்சரகத்துக்கு வந்தது
- கோவை மட்டுமின்றி கேரளாவிலும் விசாரணை நடத்த வனஅதிகாரிகள் முடிவு
கவுண்டம்பாளையம்,
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட தடாகம் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வீரபாண்டி செங்கல் சூளை பகுதியில், ஒரு பெண் யானை வாயில் படுகாயத்துடன் உயிருக்கு போராடுவது தெரிய வந்தது.
தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோ திலும் டர்கடர்களின் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.பின்னர் அந்த யானையின் உடல் மாங்கரை வனஓய்வு விடுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர்கள் சுகுமார், விஜயராகவன் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பின்னர் யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
பன்றி வேட்டைக்கு வைத்த நாட்டு வெடி என அழைக்கப்படும் அவுட்டுக் காயை யானை கடித்ததில் பலத்த காயம் அடைந்து பலியானது தெரியவந்தது.
இதுதொடர்பாக வனத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அந்த பகுதியில் எங்காவது அவுட்டுக்காய் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், பலியான பெண் காட்டு யானைக்கு 6 வயது இருக்கும். அவுட்டுக் காயை கடித்ததால் யானைக்கு வாயில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அது உணவுகளை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் தான் அந்த யானை வீரபாண்டி செங்கல் சூளை பகுதிக்கு வந்து உயிருக்கு போராடியது. சிகிச்சை அளித்தும் யானையை காப்பாற்ற முடியவில்லை.
யானை எங்கிருந்து வந்தது என்பது குறித்து வனப்பகுதியில் பொருத்த ப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் ஆய்வு செய்து பார்த்தோம். இதில் அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேரள வனப்பகுதியில் இருந்து கோவை வனச்சரகத்துக்கு வந்தது தெரிய வந்து உள்ளது.
எனவே அது எங்கு அவுட்டுக்காய் தின்று படுகாயம் அடைந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து கோவை வனச்சரகம் மட்டுமின்றி கேரளாவிலும் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர்.