கடலூரில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்ளார்.
கடலூரில் மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்
- கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
கடலூர்:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ந் தேதி சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார பணிகள் துணை இயக்குனருமான மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் திட்ட நோக்கவுரையாற்றினார். இதையடுத்து கடலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது சில்வர் பீச் வரை சென்றது. இந்த மினி மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே நாடகப்போட்டி, குரும்பட போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.
இதில் துணை இயக்குனர் (காசநோய்) கனகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா, மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் சாமிநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.