உள்ளூர் செய்திகள்

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2023-03-16 14:39 IST   |   Update On 2023-03-16 14:39:00 IST
  • துணை மேலாளர் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.
  • மொத்தமாக 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருவாரூர்:

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன் அடிப்படையில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலகு அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் நடத்தப்பட்டது.

திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலகு 1 அலுவலகத்தில் உள்ள துணை மேலாளர் அலுவலகம், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அலுவலகம் என்று பல இடங்களில் இந்த சோதனை என்பது நடத்தப்பட்டது.

இந்த அதிரடி சோதனை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்த தொடங்கி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்ச ரூபாய் கணக்கில் வராத பணம் என்பது பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோதனை பல்வேறு இடங்களில் தீவிரமாக நடத்தப்பட்டது.

சேமிப்பு கிடங்கு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெட்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து மணி நேர சோதனையில் முடிவில் மொத்தமாக 1லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்த கோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து 7பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News