டி.கல்லுப்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் வாலிபர் கொலை
- மது வாங்கி விட்டு கடையை விட்டு வெளியேறும்போது எம்.புளியங்குளத்தை சேர்ந்த வீரபாண்டி என்ற கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தால் பாண்டியராஜன் இருசக்கர வாகனத்தில் இடித்துள்ளார்.
- தகராறில் வீரபாண்டி என்ற கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டுள்ளார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி போலீஸ் சரகம் வி.வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது28). இவர் சென்னையில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக கடந்த 22-ந்தேதி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தன்னுடைய நண்பர்களான சங்கிலிகுமார், பால கிருஷ்ணன், ராஜபாண்டி, ராஜதுரை ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் எம்.புளியங்குளம் விலக்கில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அங்கு மது வாங்கி விட்டு கடையை விட்டு வெளியேறும்போது எம்.புளியங்குளத்தை சேர்ந்த வீரபாண்டி என்ற கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தால் பாண்டியராஜன் இருசக்கர வாகனத்தில் இடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் வீரபாண்டி என்ற கண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர் 4 பேரும் குச்சம்பட்டி அருகே உள்ள வெள்ளத்தாய் என்பவருக்கு சொந்தமான முட்புதர் நிறைந்த காட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் கோவிந்தராஜ் மகன் அருண்குமார்(22) என்பவரும் மது குடித்துள்ளார்.
மதுபானம் குடித்துக் கொண்டிருந்தபோது அந்த இடத்திற்கு ஏற்கனவே டாஸ்மாக் கடை முன்பு தகராறு செய்த வீரபாண்டி என்ற கண்ணன், விஜய் பிரபு மற்றும் அவரது நண்பர்களான சோனைக்குமார் கார்த்திக், சோனை பாண்டி, முனீஸ்வரன் ஆகியோர் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பாண்டிய ராஜனை உருட்டு கட்டையால் அடித்துள்ளனர். தட்டி கேட்ட அருண்குமாரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பாண்டியராஜன் சிகிச்சைக்காக பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் பாண்டியராஜன் புகார் செய்தார். அவரது புகாரில் வீரபாண்டி என்ற கண்ணன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.
இதே போல இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வீரபாண்டி என்ற கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியராஜன், ராஜபாண்டி, சங்கிலிகுமார், பாலகிருஷ்ணன், அரவிந்த்குமார், ராஜதுரை, அருண்குமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.