மாயமான வாலிபர் வழக்கில் திருப்பம்- கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் 4 பேர் கைது
- போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கண்டமனூர் வடக்குத்தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் சீமான் (22). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது சக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுத்தியலால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜாமினில் வெளியே வந்தார்.
அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
ஆனால் சீமான் கிடைக்காததால் அவருடன் சுற்றித்திரிந்த நண்பர்களுடன் விசாரிக்குமாறு பெற்றோர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
போலீசார் விசாரணையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீமான் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சீமான் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பீர்பாட்டிலால் தலையில் சீமானை தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவர் உயிரோடு உள்ளாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதுகூட தெரியவில்லை. உயிரோடு வந்துவிட்டால் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு துணியில் சுற்றி வேலாயுதபுரம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு எப்போதும் போல் அவர்கள் வேலைக்குச் சென்று சீமானின் குடும்பத்தினருடனும் அடிக்கடி பேசி அவன் வந்துவிட்டானா என கேட்டுள்ளனர்.
ஆனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் இருந்ததால் மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சஞ்சீவ்குமார், சந்தனகுமார், பிரகாஷ், லோகநாதன் ஆகியோரை விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் தாங்கள் கொலை செய்ததாக தெரிவித்தனர். போதையில் கொலை செய்ததை போலீசார் விசாரணை நடத்திய போது போதையிலேயே உளறிக் கொட்டியதால் 4 பேரையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து சீமான் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட கிணற்றிலிருந்து அவரது எலும்புக்கூடுகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவற்றை டி.என்.ஏ. பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.