சிவகிரி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு தொழிலாளி தற்கொலை
- மாரியப்பனுக்கும், சீதாலெட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- மனைவி இறந்து விட்டால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்துபோன மாரியப்பன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி கீழ மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருபவர் மாரிக்குட்டி என்ற மாரியப்பன் (வயது57). இவர் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி சீதாலெட்சுமி(50). இவர்களுக்கு மகேஷ்வரி(33) என்ற மகளும், ஈஸ்வரன்(30) என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஈஸ்வரன் கோவையில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி சிவகிரி தாலுகா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
மாரியப்பனுக்கும், சீதாலெட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மாரியப்பன் கீழமாரியம்மன் கோவில் தெருவில் தனியாக வசித்து வந்தார். சீதாலெட்சுமி தனது மருமகளுடன் வேறு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கொடைவிழாவையொட்டி இரவு அன்னதானம் நடைபெற்றது. சீதாலெட்சுமி கோவிலுக்கு சென்றுவிட்டு தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாரியப்பன் அரிவாளால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு நின்று கொண்டிருந்த உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது சீதாலெட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே மனைவி இறந்து விட்டால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்துபோன மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற சிவகிரி போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் அவர் தனது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.