சத்தியமங்கலத்தில் வீடு புகுந்து சமையல் செய்த பெண்ணிடம் நகை பறிப்பு
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெருமாள் கவுண்டர் இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பெரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் பெரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அதில் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தினார். அப்போது மற்றொரு வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் 2 பேரும் நகையுடன் தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியம்மாள் பதட்டத்தில் சத்தம் போட்டு அலறினார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெரியம்மாள் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.