உள்ளூர் செய்திகள்

ஆட்டோ மீது கார் மோதல்- டிரைவர், பெண் பலி

Published On 2024-02-12 09:34 GMT   |   Update On 2024-02-12 09:34 GMT
  • விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
  • கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள செம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி அன்ன ஜெமிலா (வயது 60). இவரது மகள் சகாய ஜூலி (25).

இவர்கள் 2 பேரும் நேற்று அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (60) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அன்ன ஜெமிலாவின் மற்றொரு மகளை திசையன்விளை அருகே உள்ள அதிசயபுரத்தில் அவரது வீட்டில் விட்டுவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினர்.

அப்போது திசையன்விளை புறவழிச்சாலை அருகில் இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே உவரியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மகன் பிபின்குமார்(20) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.


இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்திலேயே மதியழகனும், அன்ன ஜெமிலாவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த சகாய ஜூலிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திசையன்விளை கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News