உள்ளூர் செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி பூந்தமல்லியிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published On 2022-10-01 11:05 GMT   |   Update On 2022-10-01 11:05 GMT
  • மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.
  • சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

பூந்தமல்லி:

ஆயுத பூஜை பண்டிகை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். இதற்கான பயண முன்பதிவும் கடந்த வாரமே தொடங்கியது. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், செய்யாறு, தர்மபுரி, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி, பெங்களூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் பூந்தமல்லி பெங்களூர் -தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பணிமனை அருகே தற்காலிக சிறப்பு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பயணிகள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தற்காலிக வெளியூர் சிறப்பு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏற்கனவே பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து வாகனங்களும் பூந்தமல்லி பைபாஸ் சாலை மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை வேளைகளில் வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சரியான அறிவிப்பு, முறையான தகவல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பயணிகள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இந்த தற்காலிக சிறப்பு பேருந்து நிலையத்தில் போதிய நிழற்குடைகள், இருக்கைகள், கழிவறை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் பயணிகள் திறந்த வெளியிலும் வெயில் மற்றும் மழையில் நின்று பேருந்துக்காக காத்திருந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிழற்குடை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர போக்குவரத்து துறை மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News