6 அமாவாசையுடன் தி.மு.க., ஆட்சி காணாமல் போய் விடும்- பொள்ளாச்சி ஜெயராமன்
- அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது.
- செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறை செல்வார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி வருகிற 6 அமாவாசையோடு காணாமல் போய்விடும். தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரியை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளனர். அதே போல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே போகிறது. அதனை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது.
செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் பல அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறை செல்வார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. எனவே மக்கள் விரோத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் வேலை இழந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். யாரெல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்களோ அந்தக் கட்சிகளுடன் மட்டும் தான் நாம் கூட்டணி.
வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் இந்தியாவே உற்று நோக்கும் மாபெரும் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.