தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
- பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
- 8-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் பாடங்களை வாசிக்க சொல்லி அமைச்சர் கேட்டறிந்தார்.
வடவள்ளி,
பள்ளி கல்வித்துறையின் சார்பில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கு வந்த அவரை தலைமை ஆசிரியர் வரவேற்றார். இதனை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 8-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் பாடங்களை வாசிக்க சொல்லி அமைச்சர் கேட்டறிந்தார்.
பள்ளி சமையல் அறை மிகவும் தூய்மையாக சுகாதாரமாக இருப்பதை பாராட்டிய அமைச்சர், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை நேரில் பார்வையிட்டார்.
இங்கு ஒரு சில ஓட்டு கட்டிடங்கள் உள்ளன, அதை இடித்து விட்டு தரமான கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பின்னர் அங்கு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் அமைச்சர் நேரடியாக கலந்து ரையாடினார். தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 97 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதை நடப்பாண்டில் 100 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஆசிரியர்கள் உறுதி அளித்து உள்ளனர்.